இணையத் தமிழ் கட்டுரை உலகம்

மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்! – ’கரையான்’

காடுகள் நாட்டின் கண்கள்.  வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்.

- இப்படி நிறைய slogan-களை நாம் பார்த்து விட்டோம். எத்தனையை செயல்படுத்தி இருக்கிறோம்?  மரம் வளர்ப்பது நல்ல விசயம் தான், கேட்பதற்கு நன்றாக தான் இருக்கிறது வளர்பதற்கு நேரமோ இடமோ இல்லை என்பது தான் பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது.

நாம் அனைவரும் அறிந்தது தான். புவி வெப்பமாதலுக்கு முதன்மையான காரணம், பசுமை கூட வாயுக்களின் வெளியேற்றம், அவற்றில் முக்கியமாக கார்பன்-டை-ஆக்சைடின் விகிதாச்சார அளவு அதிகரிப்பது. ஒளிர்சேர்க்கை செய்யும் உயிர்களைத் தவிர மற்ற அனைத்தும் கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றுபவையாகவே உள்ளன, அத்தோடு மனிதர்களின் உருவாக்கங்களும் கார்பனை வெளியேற்றுகின்றன. பூமியில் இவை அனைத்திற்கும் எதிராக கார்பன் ஆக்சிஜன் விகிதாச்சாரத்தை சமன் செய்யப் போராடுவது மரங்கள் ஒன்று மட்டுமே!

ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள வளர்ந்த மரங்கள் ஒரு வருடத்தில் எடுத்துக் கொள்ளும் கார்பனின் அளவு, ஒரு வாகனம் 26000 மைல் பயணிப்பதால் வெளியிடும் கார்பன் அளவிற்கு ஈடானதாகும், அத்தோடு 18 மனிதர்கள் ஒரு வருடம் சுவாசிக்க தேவையான ஆக்சிஜனையும் வெளிவிடுகிறது.

ஒரு தனி மரம் ஆண்டுக்கு 260 பவுண்டுகள் ஆக்சிஜனை வெளியிடுகிறது. இது இரண்டு மனிதர்கள் ஒரு வருடம் சுவாசிக்க போதுமானதாகும். ஒரு கணக்கீட்டின்படி ஐம்பது வருடங்கள் வாழும் ‘ஒரு மரம்’ உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் மதிப்பு $30,000 , சுத்திகரிக்கும் நீரின் மதிப்பு $35,000 மற்றும் கார்பன் வடிகட்டுவதற்கான செலவில் $1,25,000 . அரசாங்கங்கள் நீரை சுத்திகரிக்கவும், கார்பன் வெளியேற்றத்தை குறைக்கவும் பல பில்லியன் டாலர்களைச் செலவிடுகின்றன! இவை அனைத்தையும் மரங்கள் இலவசமாகவே செய்து வருகின்றன.

மரங்கள் பணத்திற்காகவே வெட்டப்படுகின்றன, ஆதலால் இயற்கை ஆர்வலர்களும் மரங்களின் மதிப்பை பணத்தின் மதிப்பிலேயே விளக்கத் துவங்கி விட்டார்கள். ஆனால் இயற்கையின் மீதான நமது எந்த அளவீடுகளும் மிகச் சரியான அளவாக இராது. மண் அரிப்பை தடுத்தல், நிலத்தடி நீரின் அளவை உயர்த்துதல், ஆறுகளின் பாதையை-பெருக்கை கட்டுப்படுத்துதல், குளிர்விப்பான்களுக்கு ஆகும் செலவைக் குறைத்தல், பல்லுயிர் பெருக்கம், மரக்கட்டைகளின் மதிப்பு, மழை பொழிவு அதன் வேளாண் பலன்கள் என அளவிட இயலாத செல்வம் மர வளம்.

உதாரணமாக நமது வீட்டு செலவு கணக்கில் போட்டுப் பார்க்கலாம், வீட்டின் நான்கு முனையிலும் நான்கு மரங்கள் நட்டிருந்தால் வீட்டின் உள்வெப்பநிலை 5 முதல் 9 டிகிரி செல்சியஸ் வரை குறைகிறது. இதனால் குளிர்விப்பான்களுக்கு செலவாகும் மின்சாரத்தில் 30% குறைகிறது. வருடத்திற்கு ஒரு வீட்டில் ஆகும் சேமிப்பை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அண்மையில் அரசின் அறிக்கையில் குண்டு பல்புகளை ஒழித்தால் தமிழகத்தில் வருடத்திற்கு 600MW மின்சாரம் சேமிக்கலாம் என்று கூறியிருந்தார்கள், இதோடு ஒப்பிடுகையில் மரங்கள் மூலமான சேமிப்பு இன்னும் அதிகமாக இருக்குமல்லவா. மின்பற்றாக்குறையை போக்க நம்மாலான உதவி.

நாம் மரமோ அல்லது செடியோ வளர்க்கலாம். முதலில் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியது வளர்க்க தேவைப்படும் இடம். ஒரு கனசதுர அடி அளவு மண் போதுமானது ஒரு பப்பாளி வளர்க்க. இன்னும் இரண்டு கனஅடி இருந்தால் ஒரு முருங்கை நட்டு விடலாம். இன்னும் இரண்டு கனஅடி இருந்தால் வேம்பு நட்டு விடலாம். மக்கள் மரங்களிடமும் உடனடி பலனை எதிர்பார்க்கிறார்கள். பழ மரங்கள் நட்டாலும் பலன் தரும் வரை காத்திருக்கும் பொறுமை வேண்டும். பெரிதாக வளருமே கூரையை இடிக்குமே என்றும் காரணம் சொல்கிறார்கள், எந்த மரமும் ஒரே நாளில் அப்படி வளர்ந்து விடப்போவதில்லை எப்படி வளர வேண்டும் என நம்மால் தீர்மானிக்க இயலுமே! மரங்களுக்கு நீர் பாய்ச்சுவதிலும் சிரமம் பார்க்கிறார்கள். எந்த மரமும் வடிகட்டிய குடிநீரை எதிர்பார்பதில்லை, கழிவு நீரை திருப்பி விட்டாலும் போதும். மேலதிக பலனாக கொசுக்களிடமிருந்து விடுதலையும், நிலத்தடி நீரும் உயரும். கைவிடப்பட்ட மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை இந்த வழியில் செயல்படுத்தலாமே!

வீடுகளை சுற்றி சுற்றுச்சுவர், கொஞ்சம் சந்து போல நிலம் இருந்தால் நெட்டலிங்க மரம் நடலாம். வீட்டில் தூசி சேராது. கிளைகள் பரப்பாது, உயரமாக வளரும். நகரமயமாகி வரும் சூழலில் நம் குழந்தைகள் ஆஸ்த்துமா, தோல் வியாதிகளில் இருந்து காக்கும். இதிலும் மக்களுக்கு புயல் வந்தால் சாய்ந்து விடும், வீடு இடிந்து விடும்!! என்றெல்லாம் அச்சம் இருக்கிறது!! மிக ஆழமாக தோண்டி நடலாம் அல்லது மாற்றுச் செடியாக சவுக்கு நடலாம்.

போஸ்கோ வெர்டிகல் என்ற கட்டிடம் 27 மாடிகளுடன் கான்கிரீட் காடாக, முன்மாதிரியாக வடிவமைக்கப்பட உள்ளது. எதிர்காலத்தில் வடிவமைக்கப்படும் கட்டிடங்கள் பசுமைக் கட்டிடங்களாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அரசாங்கம் இவற்றிற்கு வழங்கும் மானியங்கள் சலுகைகளும் ஒரு காரணம். நல்ல சேதியாக சாலைகள் அமைக்கப்படும் போது மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் செயந்தி நடராசன் உறுதி அளித்துள்ளார்.

குறைந்த பட்சம் நம்மால் தொட்டிச்செடிகளாவது வளர்க்க இயலும். துளசி ஓமம் போன்ற மூலிகைச் செடிகள், பூச்செடிகள் வளர்க்கலாம். துளசி கொசுக்களை விரட்டும், காற்றைத் தூய்மையாக்கும். குறைவாக மண் ஈரமாகும் அளவில் நீர் தெளித்தால் போதுமாதலால் தரை வீணாகும் என்று கவலை வேண்டாம். அதிக வெளிச்சம் இல்லாத சூழலில் குரோட்டன்கள் வளர்க்கலாம். செடிகள் வளர்ப்பதின் மூலம் கட்டிட உள்ளமைப்பின் அழகும் கூடும். படரும் கொடிகள், அரளி, மல்லிகை, தாள் பூ, ஜினியா என வீட்டை அழகுபடுத்தும் செடிகள் ஏராளம் உண்டு.

இதற்கும் இடமில்லை என்றால், ஒரு தண்ணீர் பாட்டில் போதும், அதை வெட்டி தொங்க விட்டு அதிலும் செடிகள் வளர்க்கலாம்.

தலைகீழாகவும் செடிகள் வளர்க்கலாம்.
தாவரத்தின் தண்டானது நேர் ஒளி நாட்டமும், வேரானது நேர் புவி நாட்டமும் உடையது. தலைகீழாக வளர்க்கப்படுகையில் புவி ஈர்ப்பின் தடை இன்றி செடி அதிக நீர், சத்துகளை பெற்று அதிக வளர்ச்சி பெறும். நான் முயற்சித்து பார்க்கலாமென்றிருக்கிறேன். GoldFish in Bowl என்பது போல செடியின் வேர் பரவும் அளவே செடியின் வளர்ச்சியும் இருக்கும். போன்சாய் ஆக குறுக்கப்பட்டு வளர்க்கப் படும் மரங்களின் சந்தை மதிப்பு மிக அதிகம். நேரமும், வளர்க்கும் முறைகளும், கொஞ்சம் கலைத்தன்மையும் தெரிந்து இருந்தால் போன்சாய் வளர்ப்பில் பணம் பண்ணலாம்.

மரம் வளர்க்கும் ஆவல் இருந்தாலும், சூழலுக்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்வது அவசியம். மா, ஆல், அரச மரங்கள் வேர்களை கிடைமட்டமாக நெடுந்தொலைவு பரப்புபவை. இவற்றை வீடுகளின் அருகில் வளர்ப்பது சரியல்ல. எங்கு பார்த்தாலும் பச்சையாக வளர்ந்து நிற்கும் சீமை கருவேல மரங்களால் இயற்கைக்கு ஒரு நன்மையையும் இல்லை. இவை காற்றில் உள்ள ஈரத்தை உறிஞ்சி வாழ்பவை. சுற்றுச்சூழலின் வெப்பத்தை அதிகரிப்பவை. மண்ணை மலடாக்குபவை. இவற்றை அழிப்பது சுற்றுச்சூழலுக்கு செய்யும் பெறும் நன்மையாகும், மாற்று பயிராக பேரிட்சை விதைகளை நடலாம். குப்பையில் வீசக்கூடிய பேரிட்சை விதைகளை தரிசு நிலத்தில் வீசினாலும் போதுமே! பேரிட்சை, கற்றாழை, அரளி போன்றவை கவனிப்பாரின்றியும் வளரக் கூடியவை.

மக்கள் பயனுற செய்யும் மூன்று செயல்கள் நிலையான தர்மங்கள் ஆகும் :

 1. மக்கள் தாகம் தீர்க்க கிணறு வெட்டுவது
 2. அறியாமை அகற்றும் கல்வி புகட்டுவது
 3. நிழல் தரும் மரம் நடுவது.

இவை மூன்றும் நாம் மறைந்த பிறகும் நமக்கான நன்மைகளை தேடித் தரும். அசோகர் போர் செய்து பலரைக் கொன்றார் என்பதை விட அவர் சாலையெங்கும் மரம் நட்டினார் என்பதே பலரின் நினைவில் நிற்கிறது. குழந்தையொன்று பிறந்தால் அதன் பெயரில் தேக்கு மரம் நடலாம், வளர்ந்த பின் பலன் தரும். திருமணங்களில் மாமரம், தென்னங்கன்று பரிசளிக்கலாம், வாழ்வாங்கு வாழும். அன்புக்குரியவர் இறந்தால் அவர் பெயரில் வேம்பு  நடலாம், நிழலாகி நிற்கும்.

குழந்தைகளை மரங்களை நேசிக்க கற்றுக் கொடுத்தால் அவை மனிதர்களை நேசிக்கவும் எளிதில் கற்றுக் கொள்ளும். குழந்தைகளிடம் ஜீவகாருண்ய ஒழுக்கம் வர செல்லப் பிராணிகளை வளர்க்க பழக்கலாம். சுத்தம், இடமின்மை சவால்கள் ஏற்படும் சூழலில் செடிகள் வளர்ப்பதே சிறந்த மனப்பயிற்சி.

நமக்கு முந்தைய தலைமுறையில் இல்லாத ஒன்றாக நாம் தண்ணீரை காசு கொடுத்து வாங்குகிறோம், எதிர்கால தலைமுறை காற்றுக்கு காசு செலவழிக்க போகும் முன் நாம் விழித்திடவும், செயல்புரியவும் வேண்டும். கைப்பிடி அளவு மணல் கிடைத்தாலும் அதில் ஒரு ஆலம் விதை முளைத்து விடுகிறது. விதைகள் தயாராய் உள்ளன. விதைப்பதற்கு நம் கரங்கள் தயாராக வேண்டும்.

குறைந்தபட்சம் ஒரு விதையேனும் நம் எதிர்காலத்துக்காக விதைப்போம்! செய்வீர்களா?

- கட்டுரையாசிரியர் : கரையான்

கட்டுரையாளர் : Guest Writer

நமது தளத்தில் 41 கட்டுரை(கள்) எழுதியுள்ளார்..

கட்டுரை.காம் இணைய இதழில் தொடர்ந்து எழுதுபவர்களைத் தவிர அவ்வப்போது தலை காட்டுபவர்களின் கட்டுரை/கவிதைகளை ‘Guest Writer' என்ற பொதுப் பெயரில் வகைப்படுத்துகிறோம். அந்தந்த படைப்புகளுக்கும் கீழே எழுதியவரது பெயர் இருக்கும்.

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
Share

, , ,

13 thoughts on “மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்! – ’கரையான்’

 • banu venkat says:

  Useful article and to be followed and preserved for the next generations. Written in easy way.. keep it up friend..

 • kettabomman says:

  * What is the name of this method?
  * When we water the plants, it will fall directly from that hole?
  * Similarly the soil too

  pls give some more info!

 • SATHESH says:

  awesome

 • @selvu says:

  மிகச் சிறப்பான, மிக மிக முக்கியமான கட்டுரை. எழுதிய விதமும், தகவல்களும் பயனுள்ளவை :) )

 • எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய செய்திகள் நிறைந்த கட்டுரை. நன்றி கரையான். நானும் என் பதிவில் இது குறித்து ஆங்காங்கே எழுதியிருக்கிறேன்.

  link to bit.ly
  link to bit.ly

 • //போஸ்கோ வெர்டிகல் என்ற கட்டிடம் 27 மாடிகளுடன் கான்கிரீட் காடாக, // அதன் படத்தையும் இந்தப் பதிவில் சேர்க்கலாமே?!

  //குழந்தையொன்று பிறந்தால் அதன் பெயரில் தேக்கு மரம் நடலாம், வளர்ந்த பின் பலன் தரும். திருமணங்களில் மாமரம், தென்னங்கன்று பரிசளிக்கலாம், வாழ்வாங்கு வாழும். அன்புக்குரியவர் இறந்தால் அவர் பெயரில் வேம்பு நடலாம், நிழலாகி நிற்கும்.//
  அருமையான சிந்தனைகள். பகிர்ந்ததுக்கு நன்றி.

 • புக்மார்க் செய்து கொள்கிறேன். மிகவும் அவசியமான ஒரு பதிவு! கரையான் அவர்களுக்கு நன்றிகள்.

 • anand raj says:

  நேரத்திருக்கு, சமயத்திற்கு ஏற்ற பதிவு..,

  மரம் நட முடியாத பட்சத்தில் செடி கொடிகளையாவது வளர்க்கலாம்.

  நமது நாட்டின் சாபக்கேடு இந்த கருவேலம் தான்.

  இந்த சீமை கருவேல மரங்களை அழித்தாலே போதும்…, புவியை காப்பாற்றி விடலாம்.
  “தேரிருவேலி” என்றொரு ஊர் ராமநாதபுரம் கமுதி ஏரியா வில் இருக்கிறது.
  இந்த வேலி மரம் தான் எங்கெங்கு காணிணும்.
  அதும் ஒரு பஸ் சென்றால் கூட தெரியா அளவில் வளர்ந்து கிடக்கு.
  இந்த முள் மரம், சீமை கருவேல மரம், வேலி மரம் என பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த சனியனை ஒரேயடியாக வெட்டி வீழ்த்த இதுவரை யாரும் மெனக்கெடவில்லை. :-( (

 • என்னால் முடிந்தது…
  என் வீட்டின் மாடத்தில் செடிகள் வளர்க்கிறோம்!!
  இதன் மூலம் சிறிதளவேனும் திருப்தி கிடைக்கிறது!!

 • Se.Senthilkumar says:

  ஒரு தலைமுறைக்கான உதவி இது. கரையானுக்கு நன்றி

 • Pattu says:

  தெரிந்த விசயம் தான். ஆனால் யார் பின்பற்றுகிறார்கள்? இடம் இருந்தால் , ரூம் கட்டி வாடகை விடுபவர்கள் தான் அதிகத். இருக்கும் மர்ம் செடி களை அகற்றி வீடு சுத்தமாக இருக்கவேண்டும் என்று எண்ணும் மனிதர்கள் உங்கள் பதிவை படித்தாலாவது மாற வேண்டும்.

  பெட்ரோல் வீணாகக் கூடாது என்று பிள்ளைகள் தெரிந்து கொண்டது எப்படி சாத்தியமானதோ, அதே போல , சுறு வயதிலிருந்தே பிள்ளைகளுக்கு புகட்டுவோம்.

 • DheepakG says:

  Must read article. Thanks for it.

 • vicky says:

  after reading this i plant a tree….thanks karaiyaan by powderdappa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Copyright © 2012 Katturai.com – கட்டுரை.காம். All Rights Reserved
ஆசிரியர் : மாயவரத்தான் (www.Mayavarathaan.in / Twitter : @mayavarathaan )
வடிவமைப்பாளர் & துணை ஆசிரியர் : வின்மணி (www.winmani.com)

DMCA.com