திருச்செந்தூர் – நிலத்தடி நீர் கொள்ளை – ஸ்பெஷல் ரிப்போர்ட்
திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தாலுக்காகளில் 7,817 ஹெக்டேர் பரப்பளவு விவசாய நிலங்கள் உள்ளது.
விவசாயத்திற்கு நிலத்தடி நீரும், தாமிரபரணி ஆறும் தான் நம்பிக்கை.
ஆழ்துளை குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள். கூடவே, திருச்செந்தூர் முழுமைக்கும் குடிநீரும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இப்படித்தான் வழங்கப்படுகிறது.அணைகளில் போதிய தண்ணீர் இல்லாதது,பருவ மழை பொய்த்து போனதும் தற்போது குடிநீர் பஞ்சம் உருவாகும் அளவிற்கு இயற்கை சூழல் மாறியுள்ளது.
இந்த நிலையில் திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரியில் ஒரு தனியார் கெமிக்கல் வொர்க்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் ஆலைக்குத் தேவையான தண்ணீர் முழுக்க முழுக்க தாமிரபரணி ஆற்றையே நம்பியுள்ளது.
தற்போது தாமிரபரணியிலும் போதிய அளவில் தண்ணீர் இல்லாததால், ஆலைக்குத் தேவையான தண்ணீரை குடிநீர் வடிகால் வாரியமும் வழங்க இயலாது என்று கைவிரித்து விட்டது. தண்ணீர் இல்லாமல் ஆலை செயல்பட இயலாது என்று மேற்படி ஆலை நிர்வாகம், தூத்துகுடி மாவட்ட ஆட்சியரிடம் புலம்பியிருக்கிறது. இதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் குமார் அவர்கள் ஆலைக்குத் தேவையான தண்ணீரை தனியார் விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளை குழாய்க் கிணறுகள் மூலம் எடுத்துக்கொள்ள அனுமதி கொடுத்துள்ளதாக ஆலை நிர்வாகத்தினர் கூறி வருகின்றனர். இதனை முன்னிட்டு திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் தண்ணீர் எடுப்பதற்கு நாளொன்றுக்கு ரூ.10,000/- வீதம் வருமானம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகளும் கூறி அனுமதி பெற்றுள்ளனர்.
விவசாயப் பகுதிகளிலிருந்து நாளொன்றுக்கு 3000 க்யூப் (சுமார் 3லட்சம் டன்) தண்ணீரை ஆலையின் தேவைக்காக நிலத்தடி நீரிலிருந்து உறிஞ்சுவதால், மிக விரைவிலேயே இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் கீழிறங்கும் வாய்ப்புகள் உருவாகி வருகிறது. ஏற்கனவே இப்போதும் கிடைக்கும் நீர் உப்பு நீராக கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.
நிலத்தடி நீரை விற்பனை செய்ய எக்கச்சக்க இடைத்தரகர்கள் வேறு முளைத்துள்ளனர்.
மேற்படி தனியார் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் உள்நாட்டு மக்களின் தேவைக்கானது அல்ல. இந்த நிறுவனத்தின் மூலம் நேரடியாக மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை. இவ்வாறான நிலையில் ஆறுமுகநேரி சுற்றுபுற பகுதிகளில் காற்று மாசுபடுதல், கடல் நீர் மாசுபடுதல் போன்றவற்றுடன் நிலத்தடி நீரையும் பாழ்படுத்தும் செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஒரு பொது நோக்கத்திற்காகவும், நாட்டின் மின் தேவையை ஈடுகட்டும் விதமாகவும் கூடங்குளத்தில் அமையப்பட்டுள்ள மத்திய அரசின் அணுமின் நிலையத் தேவைக்கான தண்ணீரை கடல் நீரிலிருந்து சுத்திகரித்து பயன்படுத்தும் அளவிற்கு திட்டம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு நேரடியாக எந்த பயனும் தராத தனியார் ஆலைகள் மக்களின் அடிப்படை ஆதாரமான குடிநீரை சுரண்டி கொள்ளையடித்து வருவது வருத்தத்திற்குரிய விஷயம்.
தமிழ்நாடு நிலத்தடி நீர் மேம்படுதுதல் மற்றும் நிர்வாகம் சட்டம் 2003ன் பிரிவு:11ன் படி நிலத்தடி நீரை வீட்டுத்தேவைக்காகவோ, விவசாயத்திற்காகவோ பயன்படுத்துவதை தவிர இதர பயன்பாடுகளுக்கு தமிழக அரசின் அனுமதி உரிமம் பெற்று மட்டுமே விற்பனை செய்யமுடியும்.
சமீபத்தில் திருச்செந்தூர் வட்டாட்சியர் வள்ளிக்கண்ணு அவர்கள் இந்த நிலத்தடி நீரை மாசுபடுத்தும் விஷயத்தில் தனியார் நிறுவனத்தை எதிர்த்து நின்று கடும் நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்ததால், இட மாற்றம் செய்யப்பட்டார் என்று மக்கள் மத்தியில் பலமான பேச்சு அடிபட்டு வருகிறது.
’மழைநீர் சேகரிப்பு திட்டம்’ என்ற மகத்தான திட்டத்தை கடந்த ஆட்சியின் போது நமது மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்கள் தான் கொண்டு வந்தார். அப்படிப்பட்டவரின் ஆட்சியில் நிலத்தடி நீரை பாழாக்கும் வகையில் தனியாரும், சில அரசு அதிகாரிகளும் கூட்டணியாக செயல்படுவது வருத்ததிற்குரியது.
இந்தச் செய்தி முதல்வரின் கவனத்திற்குச் சென்றால் கடும் நடவடிக்கை எடுப்பார் என்ற அடிப்படை விஷயம் கூட தெரியாமல் செயல்படுகிறார்கள் என்பது ஆச்சரியம் தான்.
தமிழக முதல்வர் விரைவில் நல்ல நடவடிக்கை எடுத்து ‘தூத்துக்குடி மாவட்டம்’ உருவாகி 25 ஆண்டு வெள்ளி விழா கொண்டாடி வரும் மாவட்டத்தின் வாழ்வாதாரம் காப்பாற்ற வேண்டுகிறோம்.
S.கிரீஷ்குமார்.,B.Com.,B.L.
வழக்கறிஞர்,
திருச்செந்தூர்.
__________________________________________________________
(கட்டுரையில் வெளியாகியிருக்கும் கருத்துகள் கட்டுரையாசிரியருடையது. மேற்படி தகவல் குறித்து மேலதிக விபரங்களையும், மேற்படி தனியார் ஆலையின் கருத்தினையும், மாவட்ட நிர்வாகத்தின் கருத்தினையும் அறிய கட்டுரை.காம் முயற்சிகள் எடுத்து வருகிறது. அவர்கள் தரப்பிலிருந்து தகவல் கிடைக்கப் பெற்றால் அதையும் வெளியிடுவோம் – கட்டுரை.காம்)
சரிகமபதநி #10 – அல்லு அல்லு அல்லு அல்லே! கோடை விடுமுறை 2013 – 17,500 ரூபாயில் பட்டாயா








மிகவும் கவலை அளிக்கிறது. எல்லோரும் ஒற்றுமையாக இருந்து போராட வேண்டியது. ஆனால் மக்கள் கவனத்தை அங்கங்கே சிதறடித்து ஒற்றுமை இல்லாமல் அரசியல்வாதிகள் பார்த்துக்கொள்கிறார்கள். என் செய்வது? ஆண்டவன்தான் காப்பாத்தனும் .
Very Good Girishkumar.