ஈமு : ஏமாறச் சொன்னது யாரோ?!
தேக்கு மரம், சந்தன மரத்தில் ஆரம்பித்து, பெனிபிட் பண்ட், பைனான்ஸ் கம்பெனி, காந்தப் படுக்கை, கோல்ட் கிரஸ்ட், அயல்நாட்டில் வேலை, தீபாவளிச் சீட்டு என பாடுபடாமல் சம்பாதிக்க ஆசைப்பட்டு, பாடுபட்டு சேர்த்த பணத்தை தொலைத்தவர்கள் ஆயிரக்கணக்கில்! இழந்த தொகையோ பல கோடிக்கணக்கில் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. இல்லாததற்கு பேராசைப்பட்டு இருப்பதை இழந்து இன்றும் பனகல் பார்க்குகளிலும், பெருந்துறை ஹோட்டல்களிலும் கூடி புலம்பிக் கொண்டிருப்பவர்கள் ஏராளம்.. இந்த வரிசையில் அடுத்த இதோ லேட்டஸ்ட்…“ஈமு” கோழி வளர்ப்பு.
“ஈமு” கோழி குறித்து ஒரு சின்ன பிளாஷ்பேக்: -
ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய பறவை என்று சொல்லப்படும் (பறக்காத பறவை!) ஈமு கோழிகள், ’ரேட்டைட்’ இனத்தை சேர்ந்தவை. இந்த இனப் பறவைகளில் இப்போதைக்கு உயிருடன் உலவுவது தீக்கோழிக்கு அடுத்ததாக ஈமு கோழிகள். (அடுத்ததா தீக்கோழி வளர்ப்பு ஆரம்பிச்சிடப்போறாங்க!).
ஏறத்தாழ 2 மீட்டர் உயரமும், 45 கிலோ எடை வரையும் வளரக்கூடியது. எந்த தட்பவெப்ப நிலையையும் தாங்கி வளரக் கூடிய ஈமு கோழிகள், அவற்றின் இறைச்சி, முட்டைகள், தோல், தோலிருந்து பெறப்படும் எண்ணை போன்ற விலை மதிப்புமிக்க பொருட்களுக்காக வளர்க்கப்படுகின்றன.
நன்கு வளர்ச்சியடைந்த ஈமு கோழியானது, 45-50 கிலோ எடை இருக்கும். கொழுப்பு சத்து இல்லாதததால் ஈமுக் கோழியின் இறைச்சியை ரத்த கொதிப்பு, சர்க்கரை மற்றும் ஆஸ்த்துமா நோய் உள்ளவர்கள் தாராளமாக உண்ணலாம். இக்கோழியின் தோல் சாயமிடுவதற்கும், இறகுகள் பிரஷ் தயாரிக்கவும், முட்டை ஓடுகள் அலங்கார வேலைகளுக்கும், தோலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மருத்துவதுக்கும் பயன்படும் என்றும் கூறுகிறார்கள். அதாவது, ஈமு கோழிகள் இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்கிற ரீதியில் தான் நம்மூரில் விளம்பரங்கள் செய்யப்பட்டன.
ஈமு கோழி பண்ணை வைப்பதற்கு பணம் மட்டும் இருந்தால் போதும். இடம் இருந்தால் கூடுதல் வருமானம். ருபாய். 1.5 லட்சம் முதலீடு செய்தால், 3 மாத ஈமு கோழிக் குஞ்சுகள் (5 அல்லது 6 ஜோடி) கொடுக்கப்படும். இதை 18 மாதங்கள் நாம் வளர்க்க வேண்டும். அதற்கான உணவை நமக்கு ஈமு கோழிகள் தரும் நிறுவனங்களே, மாத மாதம் அனுப்பிவிடுவார்கள். இதை நாம் பராமரிப்பதற்காக மாதம் 6000 – 8000 வரை தரப்படும். நமது இடத்திலே அது பராமரிக்கப்பட்டால், கூடுதல் மாத வருமானமுண்டு (போனஸும் உண்டு). இதற்காக குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் செலவு செய்தால் போதும். கோழிகள் நோய்வாய்ப்பட்டு இறந்து போனால், காப்பீடு வசதியுமுண்டு. 18 மாதம் முடிந்த பிறகு அந்த ஈமு கோழிகளையும் அதன் மூலம் கிடைக்கும் முட்டைகளை (ஒரு முட்டை ரு. 1500 – 2000 வரை) வாங்குவதோடு, நம் முதலீட்டு பணத்தையும் திருப்பி தந்து விடுவார்கள். இப்படி நம்மிடம் வாங்கப்பட்ட வளர்ந்த ஈமு கோழிகளை ஏற்றுமதி செய்து, லாபம் அடைவோம் என்று இந்த நிறுவனங்கள் பறைசாற்றின. மேலும், நாம் வியாபாரத்தை தொடர விரும்பினால், மீண்டும் 3 மாத குஞ்சுகளிருந்து ஆரம்பிக்கப்படும். மேலும், வியாபாரத்தை விரிவாக்க விரும்பினால், வங்கி (NABARD) கடன் வசதியும் உண்டு இதனால், இந்தியாவில் ஆந்திரா, கோவா, மகாராஷ்டிரா, ஒடிசா, மத்திய பிரதேஷ் முதலான மாநிலங்களில் ஈமு வளர்ப்பு நிறுவனங்கள் வேருன்ற ஆரம்பித்தன. மேலும், தமிழகத்தில் ஈரோடு, திருச்சி, பல்லடம், புதுக்கோட்டை, வாலாஜாபாத், கொடைக்கானல், மதுரை முதலான பகுதியில், இத்தகைய ஈமு நிறுவனங்கள் விரிவடைந்தது. இதனால், மற்ற கால்நடை வளர்ப்புக்கு இணையாக ஈமு கோழி வளர்ப்பும் தங்களுக்கு நல்ல வருமானத்த ஈட்டி தரும் என்று மக்களின் எண்ண அலையாக இருந்தது.
கிராமத்தில், விவசாயத்தை நம்பி நஷ்டமடைந்த விவசாயிகள், இத்தகைய முதலீடுகள் ஈர்த்தது ஆச்சரியமில்லை. நகர்புறவாசிகளுக்கு, நிலமும் நேரமில்லாத குறையை, இந்த நிறுவனங்களே தங்களின் இடத்தை கொடுத்து பராமரிக்கும் திட்டத்தின் மூலம் தீர்த்ததால், அவர்களும் இதில் ஐக்கியமாக காரணமாக அமைந்தது. விவசாய நிலங்களேல்லாம் பண்ணைகளாக மாறின. சேமிப்புகளும், நகைகளும், விற்கப்பட்ட நிலங்களின் மூலம் கிடைக்கப் பெற்ற பணமும், ஈமு கோழி வளர்ப்புக்கு முதலீட்டாக்கப்பட்டது. இனி, நிஜத்திற்கு வருவோம்.
1987ம் ஆண்டில், ஆஸ்திரேலியாவில் வணிகரீதியாக ஈமு பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டாலும், ஈமு கோழியின் இறைச்சிக்கான நவீன தொழிற்சாலைகளோ, பதப்படுத்தும் நிறுவன்ங்களோ இல்லாத்தால், 1996ல் ஆஸ்திரேலிய பண்ணைகளில் 2 லட்சமாக இருந்த ஈமு கோழிகளின் எண்ணிக்கை, 2005ல் 20000 ஆக குறைந்ததன் மூலம், உள்ளுர் சந்தையிலே ஈமு மதிப்பிழந்த பொருளாக மாறி விட்ட்தாக ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈமு கோழித் தீவன நிறுவனங்களோ, கறியை வெட்டிப் பதப்படுத்தும் நிறுவனங்களோ, கறியிலிருந்து எண்ணைய் எடுக்கும் நிறுவனங்களோ, இந்தியாவில் இல்லை. கால்நடை மருத்துவக் கல்லூரிகளில், ஈமு கோழியின் உடற்கூற்றியல், மருத்துவம், நோய்கள் பற்றிய எந்தப் பாடமும் இல்லை. அதே போல், தமிழகத்திலிருந்து, ஈமு கோழியின் மூலம் பெறப்படும் எந்த பொருளும் ஏற்றுமதி செய்யப்படவுமில்லை, அதை பதப்படுத்தி வைக்கும் தொழிற்சாலைகளும் இங்கில்லை. இதையெல்லாம் விட ஈமு இறைச்சியை உள்ளூரிலும் சந்தைப் படுத்த முடியவில்லை. கோழி இறைச்சிக்கு நல்ல டிமாண்ட் இருக்கும் நம்மூரிலேயே ஈமு இறைச்சியை யாரும் சீண்டவில்லை. “சப்பு சப்புன்னு இருக்குதுங்க. அதை சாப்பிடுறதுக்கு சும்மாவே இருந்திடலாம்” என்கிறார் ‘ஈமு பிரியாணி’ என்று சொல்லப்பட்ட பிரியாணியை ஈரோட்டில் சாப்பிட்டு நொந்து போயிருக்கும் நண்பர் ஒருவர். ’காக்கா பிரியாணியே நல்லா இருக்கும்’ என்பது இன்னொரு கமெண்ட்!
இப்படி இருக்கும் சூழ்நிலையில், இந்த நிறுவனங்கள் எப்படி தொழில் நடத்தினார்கள் என்று பார்ப்போம்.
இந்த ஈமு நிறுவனங்கள், முதலில் முட்டைகளை கொள்முதல் செய்து அது குஞ்சுகளான பின்னர், முதலில் ஈமு பண்ணை வைக்க வருபவரிடமிருந்து 1.5 லட்சம் வாங்கிக் கொண்டு, குஞ்சுகளை தருகின்றனர். பின்னர் அவருக்கு முதல் 2-3 மாதங்கள், பராமரிப்பு செலவுக்கு ரு. 8000 – 10000 கொடுக்கப்படுகிறது. தமக்கு முறையாக வருமானம் வருகிறது என்று நம்பி, தனக்கு தெரிந்தவர்கள், உறவினர்களையும் இத்திட்டத்தில் சேர வைக்கிறார் ( இதற்கு தனி கமிஷன் சேர்பவர்களுக்கு உண்டு).
ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும், திரை நட்சத்திரங்களை வைத்து விளம்பரம் செய்து மக்களை நம்ப வைத்து, முதலீடு செய்ய தூண்டுகின்றனர். ஒன்று இருபதாகி, இருபது இருநூறாக உயர்ந்து, சங்கிலி போல் தொடர்கிறது. இதனால், முன்னால் வந்தவர்க்கு பின்னால் வந்தவர்களின் முதலீட்டு பணத்திலிருந்து சுலபமாகப் பணம் கொடுக்கப்படுகிறது. மேலும், இந்த நிறுவனங்கள், நிலமில்லாமல் முதலீடு செய்தவர்களுக்கு, ஒரே பண்ணையை பலருக்கும் காண்பித்து, இதுதான் உங்கள் பண்ணை அனைவரிடத்திலும் தெரிவிக்கின்றனர்.
முட்டை கொள்முதல் – குஞ்சுகளின் உற்பத்தி – குஞ்சுகள் விநியோகம் – மீண்டும் முட்டை கொள்முதல் என்ற சுழற்சி முறை வியாபாரம்தான் தொடர்ந்து நடைபெற்று வந்தது. முட்டை வியாபாரத்தை தவிர வேறு எந்த வித வியாபாரமும் நடப்பதில்லை. மேலும் முட்டை கொள்முதலும் அவர்கள் விருப்பப்பட்ட விலைக்குதான் எடுத்துக் கொள்கின்றனர். ஏனென்றால், சந்தையில் முட்டைகளின் தேவைகளைப் பொறுத்தும், முட்டைகளின் வரவை பொறுத்துதான், விலை நிர்ணயிக்கபடும். ஆட்டு இறைச்சியை விட ஈமு இறைச்சி ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நம்பப்பட்டாலும், ஈமுவின் இறைச்சியை, சோதனை அடிப்படையில்தான் மக்கள் உண்டார்களே தவிர, ருசிக்காக உண்ணவில்லை. தற்போதய சந்தை நிலவரப்படி, வளர்ச்சியடைந்த ஈமுவின் விற்பதாக இருந்தாலும் அடி(மாட்டு)ஈமு விலைக்கு போவதும் சந்தேகம் தான். இதனால், புதிய முதலீடுகள் நின்று போகும் அபாயம் உள்ளது என்பதை இந்த ஆண்டு முதலே, இதனைப் பற்றிய எச்சரிக்கை மணி, மாவட்ட கலெக்டர் மூலமாகவும், பத்திரிகை மூலமாகவும், அடிக்கப்பட்டது. புதிய முதலீடுகள் நிற்கும் பொழுது, முட்டை கொள்முதலும் மற்றும் மாத வருமானமும் நிறுத்தப்படுவதோடு, முதலீட்டு பணத்துக்கும் நாமம் போட்டு விட்டு, நிறுவனங்கள் காணாமல் போய் விடும். இதைத்தான் தற்போது “சுசி ஈமு பார்ம்ஸ்” அரங்கேற்றியுள்ளது. இவ்வளவு பெரிய நிறுவனமே ஓடி விட்ட நிலையில், இதனைப் பின்பற்றி இன்னும் பல அக்கடா துக்கடா நிறுவனங்களும் முதலீட்டாளர்களின் தலையில் துண்டைப் போட்டு, நெற்றியில் நாமத்தைப் போட்டு ஓடப் போவது நிச்சயம். மக்களை விடுங்கள்.. இவர்களுக்கு இவ்வளவு காசை சம்பாதித்துக் கொடுத்த ஈமுக் கோழிகளையும் ‘அம்போ’வென விட்டு விட்டு ஓடுகிறார்கள். தீவனமின்றி ஈமுக் கோழிகள் ஒவ்வொன்றாக சாகின்றன. உயிருடன் இருக்கும் ஈமுக்களோ, வேறு வழியின்றி செத்துக் கிடக்கும் சக ஈமுக்களை தின்று பசியைத் தீர்க்கும் கொடுமையும் நடந்தேறுகிறது.
புதுப்புது உத்திகள் கொண்ட மோசடிகள் தொடர்ந்து நம்மிடம் வந்த வண்ணம்தான் உள்ளன. நாமும் சளைக்காமல், இந்தத் திட்டம் ரொம்ப நல்ல திட்டம், இவர்கள் நம்மை ஏமாற்ற மாட்டார்கள் என்று நம்பி பணத்தைப் போட்டு ஏமாறுவதும் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன. பணத்தை முதலீடு செய்யும் போது யோசிக்காமல், பணத்தை இழந்து ஏமாறும் போது, கூப்பாடு போடுவதில் என்ன நியாயம்? இவர்களை ஏமாற சொன்னது யார்”?
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்கள் இருந்துக் கொண்டேதான் இருப்பார்கள்.
அடுத்த ஏமாற்றுத் திட்டம் வெளியாகி மக்கள் கூப்பாடு போடும் போது அதைப் பற்றி அலசுவோமா?!
ஏர்டெல் – Fraudband விலை உயர்வு போல்ட்டாவது நட்டாவது.. தலைவன்டா!






you are brilliant. but you expect all the people also brilliant. This never possible
இப்போ இந்த அலசு அலசுறீங்களே சாயம் போற அளவுக்கு, இதை யாரும் ஏமாறுவதற்கு முன்பே செய்திருக்கலாமே. எல்லாம் முடிந்த பின்பு அதைப்பற்றி பேசி என்ன பயன்? ஒரே பயன் தான் ‘அட இவருக்கு எல்லா விஷயமும் தெரிந்திருக்கே !!!’ என்று மற்றவர் புகழ்ச்சிய தனதாக்கிகொள்ள்ளலாம். அடுத்த முறையாவது அல்லது இப்பொழுது ஏமாந்து கொண்டு இருக்கிறார்களே எதிலாவது புது திட்டத்தில், அவர்களையாவது காப்பாற்றுங்கள்.
SHANKAR